கோயில் பணிகளுக்கு Gpay மூலம் வசூல்| அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு...
கோயில் பணிகளுக்காக உண்டியல் மற்றும் G pay மூலம் வெளி நபர்கள் வசூல் செய்த விவகாரத்தில், அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் ஜி பே (G Pay) செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தை பெறவும் முடிகிறது.
இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாக முடிந்து விடுகின்றன. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஜி பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். சின்ன டீக் கடைகள் தொடங்கி மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஜி பே பயன்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவில், புஷ்பநாத சுவாமி கோவில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில், மகாபலேஸ்வரர் கோவில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் , கோயிலுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்நிலையில் கோவில் பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை என்று கூறி தனி நபர்கள் கோயில்களுள் உள்ளே உண்டியல் வைத்து வசூல் செய்வது G pay மூலம் வசூல் செய்வது
போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்தும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து விட்டார். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் கோவிலில் வெளி நபர்கள் உண்டியல் வைத்து வசூல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு,உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோவில் தரப்பில் கோவில் செயல் அலுவலர் சரவணன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில் கோவிலில் உண்டியல், G pay வைத்து முறைகேடாக வசூல் செய்யப்பட்டது குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி இந்த கோவில் மட்டுமல்லாமல் கரூரில் பல்வேறு கோவில்களில் குபேர உண்டியல் , தாய் சமர்ப்பணம் , என்ற பெயரில் கோவிலுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் கோவிலில் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதே போல் காவல்துறை தரப்பில் அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் ஆஜராகி நாங்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் விசாரனை போதிய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதனை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி கோவில் தனிநபர் உண்டியல் வைத்து வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது இது குறித்து கோவில் செயல் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாரா?
அந்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைத்தார்.