அமெரிக்காவுக்கு அடுத்ததாக சாதனை படைத்த இஸ்ரோ! இலக்கை எட்டியது ஆதித்யா எல்1 விண்கலம்!
சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனப்படும் எல் 1 பகுதியை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1 என்ற விண்கலம், சூரியனை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலத்தை நிலைநிறுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலம் அதன் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம், அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற பகுதியை இன்று (ஜனவரி 6) எட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது நாடாக இந்தியா இந்த வரலாற்று சாதனையை சாத்தியப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, சூரிய புயல்கள் ஏற்படும் போது முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்க முடியும். மேலும், விண்வெளி பருவநிலை மாற்றத்தை நாம் முன்னதாக அறிய முடியும். அதோடு, பூமியை சுற்றி உள்ள செயற்கை கோள்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதனை இந்த ஆய்வின் வாயிலாக நாம் முன்னமே தெரிந்து கொள்ள முடியும்.