Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஃபா எல்லையில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு!

07:10 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

காஸாவின் ரஃபா எல்லையில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். 

Advertisement

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறது.

இதையும் படியுங்கள் : இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், காஸாவின் தெற்கு எல்லை நகரமான ராஃபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. அண்மை காலமாக ராஃபா நகரிலும் இஸ்ரேல் ராணுவம் தீவிர குண்டுவீச்சு நடத்தி வருவதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். அத்துடன், விரைவில் அந்த நகருக்குள் தரைவழியாகவும் நுழைந்து தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறி இஸ்ரேல் அரசு தகவல் தெரிவித்தது.

காஸாவின் பெரும்பாலான மக்கள்தொகை ரஃபா எல்லையில் நெரிசலில் தஞ்சமடைந்துள்ள நிலையில், ரஃபா எல்லையில் தாக்குதல் நடத்தினால் அது மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்கா உள்பட பன்னாட்டு அமைப்புகள் பலவும் எச்சரித்து வருகின்றன.

ஜெருசலேமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது :

"ரஃபா எல்லையில் தாக்குதலை முன்னெடுக்கும் திட்டத்தை கைவிட உலக தலைவர்கள் பலர் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தாலும், ரஃபா எல்லையில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தெளிவாக திட்டமிட்டு வருகிறது. ரஃபா எல்லையில் தாக்குதல் திட்டத்தை கைவிடுவது, ஹமாஸுக்கு எதிரான போரில் தோற்பதற்கு சமமானது என்றும், எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் எனவும், முழு வெற்றி கிட்டும் வரை இஸ்ரேல் சண்டையிடும்" என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிணைக்கைதிகள் 134 பேர் ரஃபா எல்லையில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் அங்கு தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஃபாவில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறிய பின்னரே, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Benjamin NetanyahuGazaHamasIsrelPalestinePrime Minister of IsraelRafawar
Advertisement
Next Article