போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேலிய அதிபர் சந்திப்பு!
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வழித் தாக்குதல் தாக்குதல் நடத்தியது. மேலும் 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உலக நாடுகள் காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள போப் பதினான்காம் லியோவும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர்நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் போப் லியோ இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு வாடிகனில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மத்திய கிழக்கில் வசிக்கும் கிறிஸ்துவர்களின் பாதுகாப்பு மற்றும் பிணைக் கைதிகளின் விடுதலை ஆகியவற்றைக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து இஸ்ரேல் தரப்பில் வெளியான அறிக்கையில், போப் பதினான்காம் லியோவின் அழைப்பை ஏற்று வாடிகன் நகரத்துக்கு சென்ற இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக் சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், வாடிகன் நகரத்தின் செய்தித்தொடர்பாளர் மேட்டியோ புரூனி இதனை மறுத்துள்ளார். இஸ்ரேல் அதிபர் ஹெர்சோக்தான் போப் லியோவை சந்திக்கக் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.