இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் குழந்தைகள் உட்பட 40 பேர் பலி!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் லெபனானின் ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லாவுடன், இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த தாக்குதலானது தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது தினசரி வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த முக்கிய காரணம், ஈரானும், ஹமாஸும் தான். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக ஹில்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹில்புல்லாவுக்கு ஆதரவாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மூன்று நாடுகளின் தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பல குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில், ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் கடலோர நகரமான டயரில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட மற்ற உடல் பாகங்கள், அடையாளம் காண டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் கடந்த ஆண்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3,136 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 619 பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவர். 13,979 பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.