காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.
இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், கடந்த மார்ச் 18ம் தேதி காசா மீது தாக்குதல்களை தொடங்கியது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் நேற்று (மே 13) வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழந்துள்ளனர்.