காஸாவின் சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்..!
போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காஸாவின் சில பகுதிகளில் இருந்து படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது தொடர்ந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் 20,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஹமாஸ் அமைப்பினரும் பதில் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 56,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் இருந்த ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகி பல பகுதிகள் இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன.
இதையும் படியுங்கள் : 2023-ல் இந்தியாவில் 41 லட்சம் கார்கள் விற்பனை – அதிகமான கார்களை விற்று மாருதி சுஸுகி அசத்தல்!
வெற்றி பெறும் வரை போர் ஓயாது என்று அறிவித்திருந்த இஸ்ரேல், தனது போர் தந்திரத்தில் திடீர் மாற்றமாக காஸாவின் சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெற்றுள்ளது. போர்முறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள இஸ்ரேல், இம்மாதம் காஸாவில் உள்ள படைகளின் எண்ணிக்கை குறைத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு காஸாவில் தனது தீவிர ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் குறைத்துக் கொள்வதற்கான அறிகுறியாக தெரிகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.