ஜெரூசலேமில் இஸ்ரேல் தேசியவாதிகள் பேரணி!
பாலஸ்தீனர்கள் வாழும் பழைய ஜெரூசலேம் நகரின் தெருக்களில் இஸ்ரேலிய தேசியவாதிகள் பங்கேற்கும் வருடாந்திர பேரணி இன்று நடைபெற்றது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் பூண்டது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.
வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இஸ்ரேல் போரை கைவிடவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட, முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டது. இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், பாலஸ்தீனர்கள் அதிகம் வாழும் பழைய ஜெரூசலேம் நகரின் தெருக்களில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய தேசியவாதிகள் பங்கேற்ற வருடாந்திர பேரணி இன்று நடைபெற்றது. 1967 மத்தியகிழக்கு போரில் இஸ்ரேல் ஜெரூசலேமை கைப்பற்றிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த பேரணி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜெருசலேமின் பெரிய ஜெப ஆலயத்தின் முன் திரண்டனர். அவர்கள் கொடிகளை அசைத்தும், தேசியவாத பாடல்களைப் பாடியும் நடனமாடினர். இதில் 3000க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.