#Israel-IranWar | இஸ்ரேல் - ஈரான் போரில் யாருக்கு ஆதரவு? வளைகுடா நாடுகள் விளக்கம்!
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரில் நடுநிலை வகிக்கப் போவதாகவும், ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவு அளிக்க மாட்டோன் எனவும் வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 1ம் தேதி இரவு இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்கியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனத்தை தெரிவித்த அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், போர்ப் பதற்றம் குறித்து கத்தார் தலைநகர் தோஹாவில் செளதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில், ஈரான் நாட்டு அமைச்சர்களும் பங்கேற்றனர்.
அப்போது, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரில் நடுநிலை வகிக்கப் போவதாக அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், தங்கள் நாட்டின் நிலப் பரப்பில் இருந்தோ, வான்வழித் தடத்தில் இருந்தோ தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானுக்கு உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல், ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்தால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.