For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் ஹமாஸ் போர்! |  இறந்த கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசு 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு!

09:15 PM Apr 26, 2024 IST | Web Editor
இஸ்ரேல் ஹமாஸ் போர்     இறந்த கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசு 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு
Advertisement

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்ட  சிசு 5 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வருகிறது.  இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.  இதில் சப்ரீன் அல் சகானி என்ற கர்ப்பிணியும் உயிரிழந்தார்.  இவர் தனது வயிற்றில் 30 வார சிசுவை சுமந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. இந்த தாக்குதலில் அவரது கணவரும், 3 வயது குழந்தையும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த சப்ரீன் அல் சகானின் வயிற்றில்,  குழந்தை உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் அறிந்தனர்.  பின்னர் மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். அந்த குழந்தை வெறும் 1.4 கிலோ கிராம் எடை மட்டுமே இருந்ததால்,  அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில்,  இன்குபேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

மேலும்,  அந்த குழந்தை 4 வாரங்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.  அந்தக் குழந்தைக்கு ’சப்ரின் ஜௌடா’ என பெயர் வைத்திருந்தனர்.  இந்த நிலையில்,  அந்தக் குழந்தை 5 நாட்களுக்கு பிறகு நேற்று உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் குழந்தையை பராமரித்து வந்த மருத்துவர் முகமது சலாமா கூறும்போது, “நானும்,  மற்ற மருத்துவர்களும் அந்தக் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் அந்த குழந்தை இறந்துவிட்டது.  இது எனக்கு தனிப்பட்ட முறையில் கவலையைத் தந்துள்ளது.  சுவாச அமைப்பு முதிர்ச்சியடையாத நிலையில்தான் அந்தக் குழந்தை பிறந்தது.  அந்தக் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருந்தது.  அதுவே அந்தக் குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement