For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஸா வீதிகளில் இஸ்ரேல் - ஹமாஸ் தீவிர மோதல்!

12:33 PM Nov 10, 2023 IST | Web Editor
காஸா வீதிகளில் இஸ்ரேல்   ஹமாஸ் தீவிர மோதல்
Advertisement

காஸா நகருக்குள் முன்னேறியுள்ள இஸ்ரேல் ராணுவத்தினருக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே அந்த நகர வீதிகளில் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

Advertisement

அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள். கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.

இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹமாஸுக்கு எதிராக தங்கள் நாட்டு ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக, 2வது பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் திறந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாகத் திகழும் காஸா சிட்டிக்குள் நுழைந்து அந்த நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.

காஸாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ரகசியமாக அமைத்துள்ள சுரங்க நிலைகள் இஸ்ரேல் ராணுவத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும், அந்த நிலைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹமாஸ் அமைப்பு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி நேற்று முன்தினம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், காஸாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள 130 சுரங்கப்பாதை நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அங்கு சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் இணைந்து காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஹகாரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காஸா சிட்டிக்குள் முன்னேறிச் சென்றுள்ள இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் அந்த நகர வீதிகளில் கடும் சண்டை நடைபெற்று வருவதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸா நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க கட்டமைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் படையினர் மீது தங்களது அமைப்பினர் திடீர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதில் இஸ்ரேல் தரப்பில் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருவதாகவும் ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்தனர்.

Tags :
Advertisement