இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த முன்னெடுப்பிற்கு #INDIA ஆதரவு!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை தடுப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) முதல் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி தலைநகர் ரியாத்துக்கு நேற்று முன்தினம் சென்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று நேற்று அவர் பேசியதாவது:
காஸாவின் தற்போதைய நிலையே எங்களின் முதல் கவலையாக உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பொதுமக்களை சிறைபிடிக்கும் செயல்களுக்கு எப்போதும் இந்தியா கண்டனம் தெரிவித்தே வருகிறது. இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது எங்களை வேதனையடைய செய்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த இந்தியா ஆதரவளிக்கிறது. பாலஸ்தீன விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகள் தீர்வையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஐ.நா. நிவாரண மீட்புக் குழுவினர் மூலமாக இந்தியா வழங்கி வருகிறது.
ஜிசிசியுடனான இந்தியாவின் உறவு வரலாற்று, கலாசாரம் மற்றும் ஒருமித்த பண்புகளை உடையது. பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் மக்கள்-மக்கள் தொடர்பு என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வளர்கிறது. 'மக்கள், வளமை மற்றும் முன்னேற்றம்' ஆகிய மூன்று காரணிகளும் இந்த உறவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களே இந்தியாவுக்கும் ஜிசிசிக்கும் இடையே பாலமாக திகழ்கின்றனர்.
உலகின் எரிசக்தி விநியோக மையமாக ஜிசிசி விளங்குகிறது. அதேபோல் உலகின் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ள இந்தியாவுக்கு அதிக எரிசக்தி தேவைகள் உள்ளன. எனவே ஜிசிசியுடன் இந்தியா இணைந்து செயல்படும்போது எரிசக்தி பாதுகாப்பு மேம்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், பசுமை வளர்ச்சி போன்றவை மனித வளங்கள் பகிர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. பல்வேறு பிரச்னைகள், குழப்பங்கள் எழும்போதே ஒன்றிணைந்து செயல்படுவதின் அவசியத்தை உணர முடிகிறது. எனவே, நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஆதரவளித்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றார்.