மாலத்தீவுகளுக்கு மாற்றாக இந்திய கடற்கரைகளை பரிந்துரைக்கும் இஸ்ரேல் அரசு!
இஸ்ரேலியர்களுக்கு மாலத்தீவுகள் தடைவிதித்ததை அடுத்து, இந்திய கடற்கரைகளில் இஸ்ரேலியர்கள் தங்கள் சுற்றுலா தருணங்களை கழிக்குமாறு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு மாலத்தீவுகள் தடை விதித்ததை அடுத்து, இஸ்ரேலிய குடிமக்களை இந்தியாவின் கடற்கரைகளை ஆராயுமாறு இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் அன்புடன் வரவேற்கப்படுவதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாஸ்போர்ட் கொண்ட தனிநபர்கள் நுழைவுக்கு தடை விதிக்கும் முடிவை மாலத்தீவுகள் நேற்றைய தினம் அறிவித்தது. இதனைத் தொடந்து இந்தியாவுக்கான இஸ்ரேலின் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாலத்தீவுகளின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹ்சான், மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த முடிவை அறிவித்தார்.
Since the Maldives is no longer welcoming Israelis, here are some beautiful and amazing Indian beaches where Israeli tourists are warmly welcomed and treated with utmost hospitality. 🏖️🇮🇳
Check out these recommendations from @IsraelinIndia, based on the places visited by our… pic.twitter.com/kGNEDS6fsp
— Israel in India (@IsraelinIndia) June 3, 2024
தொடர்ந்து மாலத்தீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து, அதிபர் முகமது முய்சு, இஸ்ரேலிய பாஸ்போர்ட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளார்" என்று தெரிவித்தது. மேலும் அந்த செய்திக்குறிப்பில், "இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவிற்குள் நுழைவதைத் தடுக்க தேவையான சட்டங்களைத் திருத்துவது மற்றும் இந்த முயற்சிகளை மேற்பார்வையிட அமைச்சரவை துணைக் குழுவை நிறுவுவது ஆகியவை அமைச்சரவை முடிவில் அடங்கும்" என்று கூறியது.
இதனையடுத்தே இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம், இந்தியாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய சிலவற்றை பரிந்துரைத்துளது. இந்த பதிவில் லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா மற்றும் கேரளாவில் உள்ள கடற்கரைகளின் படங்கள் இடம்பெற்று உள்ளன.
இவை தொடர்பான எக்ஸ் தள பதிவில், இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், "மாலத்தீவுகள் இனி இஸ்ரேலியர்களை வரவேற்காது என்பதால், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்கக்கூடிய, மிகுந்த விருந்தோம்பல் கொண்ட சில அழகான மற்றும் அற்புதமான இந்திய கடற்கரைகளை எங்கள் தூதர்கள் அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.