லெபனான் மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்திய #Israel... தீவிரமடையும் போர்!
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது. இந்தப் போரில் தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் பல முயற்சியில் ஈடுபட்டாலும், அனைத்தும் தோல்விலேயே முடிந்தது.
இதனிடையே காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் எல்லை அருகே தாக்குதலும் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியுள்ளது. இந்த இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் தொடங்கியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இந்நிலையில் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து தங்கள் தரைவழி தாக்குதல்களை அதிகரிக்க உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம். 146-ஆவது பிரிவு ரிசர்வ் படையினர் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் 'பயங்கரவாத' நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.