வடக்கு காசாவின் கடைசி மருத்துவமனையையும் மூடிய இஸ்ரேல்... இயக்குநர் உட்பட 240 மருத்துவ ஊழியர்கள் சிறைபிடிப்பு!
வடக்கு காசாவில் இருந்த கடைசி பெரிய மருத்துவமனை ஒன்றையும் இஸ்ரேல் இழுத்து மூடியது.
காசாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கிட்டதட்ட 15 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 46 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களும் போதிய மருத்துவ வசதி இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் காசாவில் இருந்த கடைசி பெரிய மருத்துவமனை ஒன்றையும் இஸ்ரேல் மூடியுள்ளது.
வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா பகுதியில் செயல்பட்டு வந்த கமால் அத்வான் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் 240க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளது. ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டளை மையமாக இந்த மருத்துவமனை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் இயக்குநர் அபு சஃபியா ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுவதால் அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
![](https://news7tamil.live/wp-content/uploads/2024/12/postcard-2024-12-29T214827.105-1024x576.webp)
15 மாத போர்காலம் முழுவதும் மருத்துவமனையில் இருந்தே தனது போராளிகள் செயல்பட்டனர் என்ற இஸ்ரேலின் கூற்றை காசா நிராகரித்தது. எந்த போராளிகளும் மருத்துவமனையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. காசாவில் எஞ்சியுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளைப் பாதுகாக்க ஐ.நா மற்றும் அதனை தொடர்புடைய சர்வதேச நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
ஆபத்தான நிலையில் இருந்த 15 நோயாளிகள், 50 பராமரிப்பாளர்கள் மற்றும் 20 சுகாதாரப் பணியாளர்கள் அருகிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியின் கடைசி பெரிய சுகாதார வசதி சேவையும் தற்போது இல்லை என்று கவலை தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக 350 நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. மேலும் 95 பேர் அறுவை சிகிச்சையின் போது இந்தோனேசிய மருத்துவமனைக்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் வெளியேற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.