காசாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்... 105 பேர் பலி.. பலர் படுகாயம்!
காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 105 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடந்து வருகிறது. ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படைகள் காசா நகரை குறிவைத்து போரை தொடங்கினர். 5 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவப் படைகள் காசா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தொடர் தாக்குதலில் காசாவில் இதுவரை 21 ஆயிரம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 30 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காசா பகுதியில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், உணவு மற்றும் நிவாரண பொருள்களை பெறுவதற்காக வடக்கு காசா பகுதியில் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவப் படைகள் திடீரென குண்டுகளை வீசியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 105 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.