இஸ்ரேல் தாக்குதல் - #Lebanon-ல் 46 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 46 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் (அக். 1) இரவு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது.
இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று (அக். 2) லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனிடையே தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.
இந்த தாக்குதலில் லெபனானில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 85 பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டபோது ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.