#Lebanon மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்… 57 பேர் உயிரிழப்பு!
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனால் இஸ்ரேல் சைபர் தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர் கருவிகள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு எதிராக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், கிழக்கு லெபனானில் உள்ள ஹெர்மல் பகுதியில் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில், வரலாற்று சிறப்புமிக்க 'அல்-மான்ஷியா' கட்டிடம் முழுவதும் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.