“அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்க முடியாது” - ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்!
அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை. இஸ்ரேல், காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல திரைப்பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில், சில பிணைக் கைதிகளை மட்டும் விடுவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்தார். அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது.
இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நவம்பர் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கூட்டாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எகிப்தின் ரபா எல்லை பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக சேர்ந்து நவம்பர் 24 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
அப்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசியதாவது,
சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பியா அது போன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும் என்று கூறினார்.