வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லையா? வெளியான அதிரடி உத்தரவு!
வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக மூன்று பேருக்கு எதிராக அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் இதற்கு பலதரப்பிலிருந்தும் மறுப்பு எழுந்துள்ளது. காரணம் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸாரால், “இந்த வழக்கு பட்டியல் இன வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை, நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனவும் புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பினரும் வாதங்களை முன் வைத்தனர்.
இந்த வழக்கில் இன்று (பிப்.,03) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி, போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.