இஸ்மாயில் ஹனியே உடல் கத்தாரில் அடக்கம்... கொல்லப்பட்டது எப்படி? வெளியான புதிய தகவல்!
ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்காசிய நாடான ஈரானில் அதிபராக இருந்த முகமது ரெய்சி கடந்த ஜூன் மாதம் 15ல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 5ஆம் தேதி அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மசூத் பெசஷ்கியான் வெற்றி பெற்று, ஜூலை 30ல் ஈரானின் புதிய அதிபராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சிக்காக, 86 நாடுகளைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், ராணுவ தளபதிகள் மற்றும் தலைவர்கள் டெஹ்ரானுக்கு வந்திருந்தனர். நகர் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் அவர் டெஹ்ரானில் வழக்கமாக தங்கும் விடுதிக்கு திரும்பினார். ஜூலை 31ம் தேதி, அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பலத்த வெடி சத்தம் கேட்டது. ஈரான் படையினர் சென்று பார்த்த போது இஸ்மாயில் ஹனியேவும், அவரது பாதுகாவலரும் இறந்து கிடந்தனர்.
அந்தப் படுகொலைக்கு மறுநாளே, காஸாவில் தாங்கள் முன்னர் நடத்திய குண்டுவீச்சில் ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவர் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், 'ஹனீயேவைப் படுகொலை செய்தது காஸா போர் நிறுத்தத்துக்கு துளியும் உதவாது' என்று விமர்சித்தார்.
தொடர்ந்து இஸ்மாயில் ஹனீயே படுகொலைக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் அந்த நாட்டு ஆதரவுடன் செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் சூளுரைத்துள்ளன. அதற்கு இஸ்ரேலும் 'எதையும் எதிர்கொள்ளத் தயார்' என்று பதிலளித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பை ஈரான் குற்றம் சாட்டியது. மேலும் ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் அது ஏவுகணை தாக்குதல் அல்ல என்பதை ஈரான் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில், ரிமோட் வாயிலாக இயக்கக் கூடிய ஏ.ஐ., ரோபோ வகை வெடிகுண்டு அவரது அறையில் இருந்தது தெரிய வந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே, அந்த விடுதியில் வெடிகுண்டை மறைத்து வைத்து, ஹனியே அறையில் இருப்பதை உறுதி செய்து குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என, ஈரான் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.
இஸ்மாயில் ஹனியேவுக்கு பக்கத்து அறையில் பாலஸ்தீனியர் இஸ்லாமிக் ஜிஹாத் என்ற அமைப்பின் தலைவர் சியாத் அல்- நகலஹா தங்கியிருந்தார். ஆனால் அவரது அறைக்கு பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. கொலையாளிகளின் நோக்கம், இஸ்மாயில் ஹனியேவை மட்டும் கொல்வது என்பது, இதன் வாயிலாக தெளிவாக தெரிவதாக அமெரிக்க உளவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தலைநகரில் உயர்மட்ட பாதுகாப்பில் உள்ள சொகுசு விடுதியின் உள்ளே இரண்டு மாதங்களாக வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது மற்றும் அறையில் இருக்கும் போது துல்லியமாக குண்டை வெடிக்கச் செய்திருப்பது ஆகியவை, உள்ளூர் ஆட்களின் உதவியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் உடல், கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பாலஸ்தீன குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.