ஈஷா மையத்திற்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடை இல்லை | #SupremeCourt அதிரடி உத்தரவு!
ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என உத்தரவிட்டு ஈஷா யோகா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விசாரணை செய்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனடிப்படையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து, கடந்த 2 நாள்களாக ஈஷா யோகா மையத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஈஷா யோகா மையம் தரப்பில் காவல்துறையினரின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி கோரிக்கை வைத்தார்.
அந்த வகையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, காமராஜின் மகள் லதா மற்றும் கீதா ஆன்லைன் மூலம் ஆஜராகி டெல்லி சட்ட சேவை மைய செயலாளரிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனை பதிவு செய்து சட்ட சேவை மைய செயலாளர் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அந்த அறிக்கையில், இரு பெண்களும் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் ஈஷா மையத்தில் தங்கி சேவை புரிவதாக விசாரணைக் குழுவிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஈஷா மையத்தில் பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் விசாகா கமிட்டி செயல்படவில்லை. ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக்கூடாது" என கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், "நிலுவை வழக்குகளை சட்டப்படி விசாரிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை ஆட்கொணர்வு மனு தொடர்பானது" என கூறினர்.
மேலும், "2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து தங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை. வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது" என தெரிவித்தனர்.
இறுதியில், ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என்றும் ஆட்கொணர்வு மனுவில் கூடுதல் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் கூறி மனுவின் விசாரணையை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.