உங்கள் காரின் மைலேஜ் குறையப்போகிறதா? - E20 பெட்ரோல் குறித்த அரசின் விளக்கம்!
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என்ற கருத்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனால் பெட்ரோலை விட குறைவான ஆற்றல் அடர்த்தி (energy density) கொண்டது என்பதால், மைலேஜில் சிறிய அளவில் குறைவு ஏற்படலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், இந்த குறைவு பெரிய அளவில் இருக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் E20-க்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் மைலேஜ் 1-2% மட்டுமே குறையக்கூடும். பிற வாகனங்களில் மைலேஜ் 3-6% வரை குறையக்கூடும்.
இந்த சிறிய அளவிலான மைலேஜ் குறைவை, எஞ்சின் டியூனிங்கில் (engine tuning) மேம்பாடுகள் செய்வதன் மூலம் சரிசெய்யலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல், பெட்ரோலை விடக் குறைவான கார்பன் உமிழ்வுகளை வெளியேற்றுவதால், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கிறது.உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கலாம்.
இதனால் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும். கரும்பு, மக்காச்சோளம் மற்றும் அரிசி போன்றவற்றிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
இந்தியாவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள், ஏப்ரல் 2023 முதல் E20-க்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வாகனங்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளன. எனவே, புதிய வாகன உரிமையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று அரசு உறுதியளிக்கிறது.