நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் விஷால்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசியிருந்தார். அதாவது “திருமணம் முடிவாகிவிட்டது. ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலிக்கிறேன். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான 'யோகி டா' திரைப்படத்தின் விழா இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் நடிகர் விஷால் - தன்ஷிகா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராண்மை, பரதேசி, கபாலி, காலக்கூத்து, அரவான் போன்ற படங்களில் நடித்தவர் சாய் தன்ஷிகா. இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே எனது திருமணம் என விஷால் கூறியிருந்தார். 9 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த கட்டிடமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.