#Suriya45 படத்தின் பெயர் இதுவா?
சூர்யா 45 படத்தின் தலைப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகை சுவாசிகா, பிரபல நடிகர் இந்திரன்ஸ், நடிகர் யோகி பாபு, நடிகை சிவாதா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
ஆர்.ஜே.பாலாஜி வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேட்டைக்காரன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.