இப்படிலா மோசடியா? கரப்பான் பூச்சி, ஆணுறைகளை வைத்து 63 ஹோட்டல்களில் ஏமாற்று வேலை... சீன மாணவர் சிக்கியது எப்படி?
சீனாவில் சுத்தமின்மையை காரணம் காட்டி ஹோட்டல்களில் இழப்பீடு கோரி மோசடி வேலையில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சீனாவின் Zhejiang மாகாணத்தின் Taizhou-வைச் சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவர் ஜியாங். இவர் தனது பெற்றோர் கல்வி செலவுக்காக கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அடிக்கடி ஹோட்டல்களுக்கு சென்று தங்குவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.
அங்கு ஹோட்டல் அறைகளில் இறந்த கரப்பான் பூச்சி, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், தலைமுடி, சிள் வண்டு போன்றவற்றை வைத்துவிட்டு, பின்னர் ஒன்றும் தெரியாதது போல், ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து அறை சுத்தமாக இல்லை என புகார் செய்வார். தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது தான் தங்குவதற்கு பணம் கேட்கக்கூடாது எனக்கூறி வந்துள்ளார். மேலும் சுத்தம் இல்லாத அறையை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு ஹோட்டல் குறித்து அவதூறு பரப்புவேன் எனவும் மிரட்டுவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

வருமானம் மற்றும் நற்பெயரை இழக்க நேரிடுமோ எனும் பயத்தில் ஹோட்டல் நிர்வாகங்களும் ஜியாங் கேட்கும் பணத்தை கொடுத்து வந்துள்ளன. இவ்வாறு மிரட்டி பணம் பறிக்கும் வேலை தொடர்கதையாகி உள்ளது. இதன்மூலம் வரும் இழப்பீட்டு தொகையினை அவர் செலவுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். பின் அந்த பணம் தீர்ந்த பின் அடுத்த ஹோட்டலுக்கு சென்று இதேபோல மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவ்வாறு கடந்த 10 மாதங்களாக கிட்டதட்ட63 ஹோட்டல்களில் தங்கி மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் ஜியாங். சில சமயங்களில் ஒரே நாளில் 3 அல்லது 4 ஹோட்டல்களுக்கு சென்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஹோட்டலுக்கு சென்று இதுபோல மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சுதாரித்த அந்த ஹோட்டல் நிர்வாகி, போலி சுகாதார பிரச்னைகளை கூறி 400 யுவான் (ரூ.4700) பறிக்க முயன்றதாக ஜியாங் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஹோட்டலுக்கு சென்று ஜியாங்கை சோதனை செய்த போலீசார், அவரிடம் இருந்த இறந்த கரப்பான் பூச்சிகள் மற்றும் அழுக்கு ஆணுறைகள் உட்பட, அவர் தனது மோசடியை அரங்கேற்றப் பயன்படுத்திய பொருட்களைக் கொண்ட 23 பைகளை கண்டுபிடித்தனர். விசாரணையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல், ஜியாங் 380க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருந்தது தெரியவந்தது.