உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. இந்த நிலையில் அதிமுக கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தி வந்தார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது,
"மக்கள் நம்பிக்கை இழந்தவர்களால் இந்த தீர்மானம் கொண்டு வந்திருப்பதை பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பதுதான் உண்மை. கடந்த 2017 ஆம் ஆண்டு என்னால் இதுபோன்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக வருந்தினேன் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். கடந்த 2006 -2011ம் ஆண்டு காலகட்டத்தில் நம்முடைய பேரவை தலைவர் பேரவையின் உறுப்பினராக இருந்துள்ளார்.
அப்போதில் இருந்து அவரை எனக்கு நன்றாக தெரியும். நேர்மையான கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்கும் பண்பு கொண்டவர். அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பேசும் பண்பும் என்னை கவர்ந்த காரணத்தினால் தான் அவரை பேரவை தலைவராக முன்மொழிந்தேன். அப்பாவு கனிவானவர் அதே நேரத்தில் கண்டிப்பானவரும் கூட, அந்த இரண்டுமே அவை நடத்துவதற்கு முக்கியமானது.
கடந்த காலங்களைப் போல இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுதான் என நினைத்து அப்பாவு செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கண் ஜாடையாக கூட அப்பாவுவிடம் பேசி நான் பார்த்திருக்கிறேன். 2017ம் ஆண்டு அவையில் நான் பேசியதை நினைவு கொள்கிறேன். எத்தனை விதிமீறல்கள் மரபுகளில் இருந்து விலகல்கள், என்னுடைய உரையில் அன்று நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அதனை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. இருப்பினும் நான் அதற்காக வேதனை கொண்டேன். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் அப்பாவுவினை நான் முன்மொழிந்தேன்.
என் தலையீடோ, அமைச்சர்கள் தலையீடோ இன்றி பேரவையை நடத்தி வருகிறார். நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. விருப்பு, வெறுப்பின்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். சுதந்திரக் காற்றை இந்த பேரவை சுவாசிக்கிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து சிறப்பாக செயல்படுகிறார்.
உண்மைக்கு மாறான செய்திகள் தீர்மானத்தில் உள்ள காரணத்தினால் பேரவை தலைவர் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சரான எனக்கு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மணி நேரம் 58 ஒரு நிமிடம் பேசியிருக்கிறார். பேரவை கடைபிடிக்க வேண்டிய பண்பாட்டினை பேரவை தலைவராக அப்பாவு கடைபிடித்துள்ளார்.
பல நாட்களில் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டு திமுக உறுப்பினர்கள் பேச பெயர் இடம்பெற்றிருந்தும் இன்னொரு நாள் பேசலாம் என்று கூறி தவிர்த்திருக்கிறார்கள். இந்த அரசின் மீது குற்றம், குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா. உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்ததற்கு உங்கள் மனசாட்சி உறுத்தும், இதனை பேரவை தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை அவை ஏற்காது" என்று தெரிவித்துள்ளார்.