'மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் விலக்கு' உள்ளதா ? - வைரலாகும் தகவல் உண்மையா?
This News Fact Checked by ‘The Quint’
சமூக ஊடகங்களில் ரயிலில் பயணிப்பதற்கு 'மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் விலக்கு' திட்டம் தொடர்பான பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்திய ரயில்வே (IR) ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அதன்படி 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது எனவும் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு இருக்கை வகுப்புகளுக்கு வெவ்வேறு விகித சலுகைகளை வழங்குவதாக ஒரு பட்டியல் வைரலாகி வருகிறது. மேலும் இப்புதிய ரயில்வே திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்வதன் நன்மைகளான மருத்துவ உதவியைப் பெறுதல், முன்னுரிமை படுக்கை ஒதுக்கீடு மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவற்றையும் கிடைக்கும் எனவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் உள்ள கூடுதல் கூற்றுக்களின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை இங்கே மற்றும் இங்கே காணலாம் .)
இது உண்மையா?: இல்லை, வைரலான கூற்று தவறானது. இந்திய ரயில்வே 2020 ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தி வைத்தது, அதன் பிறகு அதை மீண்டும் வழங்கவில்லை.
இந்த உண்மையை எப்படிக் கண்டுபிடித்தோம்?:
மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் விலக்கு' என்ற வார்த்தையுடன் ஒரு முக்கிய வார்த்தை தேடலை நடத்தினோம் . அதன் முடிவில் இந்தத் திட்டம் அல்லது கொள்கை இருப்பதை உறுதிப்படுத்தும் எந்த நம்பகமான அறிக்கைகளையும் காணவில்லை. 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் டிக்கெட்டுகளில் தள்ளுபடி வழங்கும் கொள்கை இடைநிறுத்தப்பட்டது . இது மீண்டும் தொடங்கப்பட்டதாக சமீபத்திய அறிவிப்புகள் அல்லது சுற்றறிக்கைகள் எதுவும் இல்லை.
இந்தக் தள்ளுபடியை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மார்ச் 30, 2022 அன்று நாடாளுமன்றத்தில் சிபிஐ(எம்) எம்பி. சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே மூன்று வகையான சலுகைகளை வழங்கி வருவதாகக் கூறினார்.
"சலுகைகள் வழங்குவதற்கான செலவு ரயில்வேயை பெரிதும் பாதிக்கிறது, எனவே மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து வகை பயணிகளுக்கும் சலுகைகளின் வரம்பை விரிவுபடுத்துவது தற்போது விரும்பத்தக்கது அல்ல" என்று அஸ்விணி வைஷ்ணவ் கூறினார்.
ஏப்ரல் 2023 இல், மூத்த குடிமக்களுக்கான இந்தச் சலுகைகளை மீண்டும் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை (PIL) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, தி எகனாமிக் டைம்ஸ் உட்பட பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன . இந்தப் பிரச்சினையை பாஜக தலைவர் பாபுபாய் தேசாய் 2024 நவம்பரில் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
தனது பதிலில் , இந்திய ரயில்வே ஒவ்வொரு பயணிக்கும் சராசரியாக 46 சதவீத சலுகையை வழங்கியதாக வைஷ்ணவ் கூறினார், ஆனால் மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
எனவே 2025-26 மத்திய பட்ஜெட்டில் ரயிலில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்கும் எந்த திட்டங்கள் அல்லது கொள்கைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகிறது.
முடிவு:
'மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் விலக்கு' என புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்குவதாக ஒரு தவறான கூற்று வைரலாகி வருகிறது.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.