For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா? - நடிகர் சூரி கொடுத்த நச் பதில்!

வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளார்.
03:53 PM May 19, 2025 IST | Web Editor
வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளார்.
வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா    நடிகர் சூரி கொடுத்த நச் பதில்
Advertisement

காமெடியனாக தனது கரியரை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர்தான் நடிகர் சூரி. இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் காமெடியான நடித்துள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயன், சூரி இணைந்து நடித்த படங்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் சூழலிலும் எப்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

காமெடியனாக நடித்து வந்த சூரி வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன்’ படத்தில் இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த அளவிற்கு நடிப்பில் கலக்கி இருந்தார். இனிமேல், ஹீரோவாக மட்டுமே நடிங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, ‘கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில், திருநெல்வேலியில் உள்ள திரையரங்கில் சூரி ரசிகர்களுடன் சேர்ந்து 'மாமன்' படம் பார்த்தார். பின்னர் வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து, நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "மாமன் படம் சினிமாவை தாண்டி அவர்களுடைய குடும்பத்தை ஞாபகப்படுத்தும். தங்களுடைய வாழ்க்கையை தத்ரூபமாக எடுத்திருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இதுதான் இந்த படத்திற்கான வெற்றியாக நான் நினைக்கிறேன். மாமன் படத்தை பார்ப்பதற்கு குடும்பம் குடும்பமாக வருகிறார்கள், திரையரங்கில் அழுவாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள். மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்" என்றார்.

இதனையடுத்து, "புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு, கதை எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய இயக்குநர், புதிய இயக்குநர் என்று வித்தியாசம் கிடையாது. புதிய இயக்குநர்கள் நிறைய கதை கொண்டு வருகிறார்கள். பல்வேறு வெற்றிகளையும் கொண்டு வருகிறார்கள். புது இயக்குநரை யாரு புறக்கணிப்பது கிடையாது" என்றார்.

தொடர்ந்து, "கமலஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த வருட இறுதிக்குள் மண்டாடி என்ற மற்றொரு படம் வெளியாகும்" என்றார். பின்னர், சூரி வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த சூரி, "மக்கள் என்னை கதாநாயனாகவே பார்த்து விட்டார்கள். அப்படியே இருந்துவிடுகிறேன். தற்போது வரை வில்லனாக நடிக்க வாய்ப்பு வரவில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்" என்றார்.

நடிகர் சூரியின் உணவகம் குறித்து அடுத்தடுத்து சர்ச்சை எழுவது குறித்த கேள்விக்கு, "நல்லது செய்து கொண்டு இருந்தால் காழ்ப்புணர்ச்சியில் சிலர் பேச தான் செய்வார்கள். நான்கு பேர் பேசுகிறார்கள் என்று நினைத்தால் நல்லது எதுவும் செய்ய முடியாது. பேசுபவர்கள் எது வேண்டுமானாலும் பேசட்டும்" என்றார். தொடர்ந்து இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது குறித்து திரைப்படத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். இளைஞர்களே போதைக்கு அடிமையாக வேண்டாம். சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் அது சரியாக இருக்காது. அதிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்" என்று சூரி தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், "சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. எல்லாம் கஷ்டம் தான்" என்று கூறினார். காமெடியன்கள் அனைவரும் கதாநாயகனாக நடித்தால் காமெடிக்கு பஞ்சம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு, "புதிய புதிய காமெடி நடிகர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்" என்றார். சூரி சந்தானம் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "அதை சந்தானத்திடம் தான் கேட்க வேண்டும்" என்று பதில் அளித்தார்.

Tags :
Advertisement