இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை? - #BCCI விளக்கம்!
இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்தப்படுமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் நிலவிவரும் நிலையில், அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டதது.
இந்நிலையில், இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடத்தப்படாது என்று தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா பேசியதாவது,
“வங்கதேச கலவரத்தை தொடர்ந்து, மகளிர் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து ஐசிசி முறையிட்டது. மழைக்காலம் என்பதால் இந்தியாவில் போட்டியை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இதனால், அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை நடத்தும் எண்ணம் இல்லை. அதேபோல், இந்தியாவில் பிங்க் பால் (இரவு நேர டெஸ்ட்) போட்டிகள் நடத்தும் எண்ணமும் இல்லை.
பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் 2 நாட்களில் முடிவடைந்துவிடும். இதனால், பார்வையாளர்களும், ஒளிப்பரப்பாளர்களும் பணத்தை இழக்கிறார்கள். ரசிகர்கள் 5 நாட்கள் டெஸ்ட் போட்டியை பார்க்க டிக்கெட் வாங்குகிறார்கள். இரண்டு நாட்களில் போட்டி முடிவடைந்தால், அவர்களுக்கு பணம் திருப்பி தரும் நடைமுறை இல்லை” எனத் தெரிவித்தார்.