‘ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி பரிசோதனை செய்த அன்புமணி ராமதாஸ்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Newsmeter
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டி தவறாக பரிசோதிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
கடலூர் மாவட்டம் கண்டக்காடு கிராம பொதுமக்களுக்கு, பாமக சார்பில் நிவாரணம் மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் கடந்த டிச. 8 அன்று நடைபெற்றது. இதனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார். அப்போது, அப்பகுதி மக்களுக்கு அவரே மருத்துவ பரிசோதனையும் செய்தார். இந்நிலையில், “உலகத்திலேயே ஸ்டெத்தஸ்கோப்பை காதில் மாட்டாமல் நோயாளியை செக் செய்யும் அதிசய டாக்டர்” என்ற தலைப்புடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், அன்புமணி ராமதாஸ் ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் வைத்தபடி சிறுவனை பரிசோதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஸ்டெத்தஸ்கோப்பை காதில் மாட்டாமல் கழுத்தில் வைத்து தவறாக பரிசோதிக்கும் அன்புமணி ராமதாஸ் என்று கூறி இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை சரிபார்ப்பு:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அவர் உண்மையில் அச்சிறுவனுக்கு சரியாக ஸ்டெத்தஸ்கோப்பை காதில் வைத்து பரிசோதிப்பதும் தெரிய வந்தது.
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்க்கப்பட்டது. அப்போது, “கடலூர் அருகே மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் அன்புமணி ராமதாஸ்” என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு காணொலி வெளியிட்டிருந்தது.
அதில், 1:02 பகுதியில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சிறுவனுக்கு ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி பரிசோதிக்கும் அன்புமணி ராமதாஸ் தனது தவறை உணர்ந்து 1:09 பகுதியில் கழுத்தில் இருக்கும் ஸ்டெத்தஸ்கோப்பை முறையாக காதில் வைத்து சரியான முறையில் அச்சிறுவனுக்கு பரிசோதனை செய்கிறார். இதே காட்சியை மின்னம்பலம் ஊடகம் வெளியிட்டுள்ள காணொலியில் 35:59 பகுதியிலும் காணலாம்.
முடிவு:
தேடலின் முடிவாக மருத்துவ பரிசோதனையின் போது ஸ்டெத்தஸ்கோப்பை காதில் மாட்டாமல் கழுத்தில் வைத்து தவறாக பரிசோதிக்கும் அன்புமணி ராமதாஸ் என்று வைரலாகும் புகைப்படம் தவறானது என்றும் உண்மையில் அவர் தன் தவறை உணர்ந்து மீண்டும் சரியாக ஸ்டெத்தஸ்கோப்பை காதில் வைத்து சிகிச்சை அளிக்கிறார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.
Note : This story was originally published by Newsmeter and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.