For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சி என பகிரப்படும் வீடியோ உண்மையா?

09:33 AM May 23, 2024 IST | Web Editor
ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சி என பகிரப்படும் வீடியோ உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘NewsMeter'

Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சி என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொலி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன்,  மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 19-ம் தேதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர். 

இந்நிலையில், “ஈரான் அருகே நடந்த விபத்து காட்சி கண்களில் கண்ணீரை வரவழைக்கும் காட்சி” என்ற கேப்ஷனுடன் ஹெலிகாப்டர் ஒன்று மலைகளுக்கு நடுவே விபத்தில் சிக்கி வெடித்து சிதறும் காணொலி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறி இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை சரிபார்ப்பு:

இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்க்கப்பட்டது. அப்போது, 2022-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி 1lurer என்ற இணையதளத்தில் வைரலாகும் காணொலியுடன் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், “ஜார்ஜிய எல்லைக் காவல்துறையினரின் மீட்பு ஹெலிகாப்டர். நாட்டின் வடக்கே உள்ள குளிர்கால ஓய்வு விடுதி நகரமான குடாரியில்
வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 29, 2022) கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியதாக ஜார்ஜிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அஜர்பைஜானின் தேசிய செய்தி நிறுவனமான azertag அதே தேதியில் வைரலாகும் ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. Georgia Today என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அதே தேதியில், “விபத்தில் சிக்கிய ஜார்ஜிய எல்லைக் காவல்துறையினரின் ஹெலிகாப்டர்" என்று வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/watch/?v=1270959803645228

மேலும், “ஜார்ஜிய பிரதமர் Irakli Garibashvili குடாரியில் விபத்துக்குள்ளான எல்லைக் காவல்துறை ஹெலிகாப்டரில் இருந்த பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் முதலுதவி அளித்தவர்கள் இறந்தது குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜூலை 30-ம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்" என்று Agenda என்ற ஜியார்ஜிய ஊடகம் அதே தேதியில் செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு:

ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி தவறானது என்றும், அது உண்மையில் ஜியார்ஜிய எல்லைக் காவல்துறையினரின் மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் காணொலி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

Note : This story was originally published byNewsMeter’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement