ரயிலில் சில நபர்கள் மது போதையில் தொந்தரவு ஏற்படுத்தியதாக வைரலாகும் பெண்ணின் வீடியோ சமீபத்தியதா?
This News Fact Checked by ‘PTI’
ஜெய்ப்பூரிலிருந்து ஸ்ரீ கங்காநகருக்கு பயணித்தபோது, மது போதையில் இருந்த சில நபர்கள் தொந்தரவு ஏற்படுத்தி தவறாக நடந்து கொண்டதாக ஒரு பெண் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் வீடியோ பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில், இந்த சம்பவம் சமீபத்தில் நடக்கவில்லை என கண்டறியப்பட்டது. வைரலான காணொளி 2023 ஆம் ஆண்டுக்கு முந்தையது எனவும், மேலும் சம்பவம் புகாரளிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பயணிகள் கைது செய்யப்பட்டனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
உரிமைகோரல்
பிப்ரவரி 22 அன்று, ஒரு ஃபேஸ்புக் பயனர், ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பெண் கேள்வி எழுப்பும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சிலர் ரயிலில் மது அருந்திவிட்டு பிரச்னைகளை உருவாக்கியதாக அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
வீடியோவில் உள்ள பெண் 1:47 வினாடியில், "இப்போது அதிகாலை 1:00 மணி, நான் ஜெய்ப்பூரிலிருந்து ஸ்ரீ கங்காநகருக்கு இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணம் செய்கிறேன். அடுத்த பெட்டியில் அமர்ந்திருக்கும் மூன்று பேர் மது அருந்திவிட்டு துஷ்பிரயோகம் செய்கின்றனர். நான் அவர்களை எச்சரிக்க முயற்சித்தேன், ஆனால் எதுவும் மாறவில்லை... ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், ரயிலில் ஒரு போலீஸ் அதிகாரி கூட இல்லை..." என தெரிவித்திருந்தார்.
காணொளிக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு, கீழே ஸ்கிரீன்ஷாட் கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
இந்த வைரல் வீடியோவை இன்விட் கருவியில் இயக்கியதில் பல கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்து கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது, இதேபோன்ற கூற்றுகளுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ள பல பயனர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபோன்ற 2 பதிவுகளை இங்கே, இங்கே காணலாம். மேலும் அதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே, இங்கே காணலாம்.
தேடல் முடிவுகளை மேலும் ஆராய்ந்தபோது, நவம்பர் 20, 2023 அன்று ஆம் ஆத்மி ராஜஸ்தான் மாநில மகளிர் பிரிவின் தலைவரான காயத்ரி பிஷ்னோய் ட்விட்டரில் பதிவேற்றிய வைரல் வீடியோ கிடைத்தது.
அந்தப் பதிவின் தலைப்பு: “பெண்கள் மட்டுமல்ல, @IRCTCofficial-ல் எந்தப் பயணியும் பாதுகாப்பாக இல்லை. நள்ளிரவு 1 மணிக்கு, சில குற்றவாளிகள் வெளிப்படையாக போதைப்பொருள் உட்கொண்டு, பயணிகளை மோசமான வார்த்தைகளால் துன்புறுத்துவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் புகார் செய்ய முயன்றபோது, ஒரு RPF/JRPF கூட முழு ரயிலிலும் நிறுத்தப்படவில்லை என்பதைக் கண்டேன். எனது TT புகார் செய்தபோது, 1 மணி நேரத்திற்குப் பிறகு போலீசார் வந்தனர். இதற்கிடையில், குற்றவாளிகள் என்னை மிரட்டிக் கொண்டே இருந்தனர். சக பயணிகளின் உதவியுடன், போலீசார் வரும் வரை நான் முழு விஷயத்திலும் உறுதியாக நின்றேன். ஆனால் இந்த 1 மணி நேரத்தில் ஏதேனும் விபத்து நடந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பாவார்கள்?” என குறிப்பிடப்பட்டிருந்தது.
பதிவின் இணைப்பு இங்கே, கீழே ஒரு ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
பதிவை ஸ்கேன் செய்தபோது, நவம்பர் 1, 2023 அன்று வடமேற்கு ரயில்வேயின் வீடியோவில் ஒரு கருத்து கிடைத்தது. அதில், “20.11.2023 அன்று, ரயில் எண் 22997 ஸ்ரீ கங்காநகர் எக்ஸ்பிரஸின் பெட்டி எண் HA-1 இல் சிலர் தொந்தரவு செய்வதாக தகவல் கிடைத்தது. அடுத்த நிலையத்தை அடைந்ததும், ரெசப் தேகானா புகாரை விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட பெட்டியில் தொந்தரவு செய்த 03 பேரைப் பிடித்து, சட்ட நடவடிக்கை எடுத்தார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்துக்கான இணைப்பு இங்கே, கீழே ஒரு ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
காயத்ரி பிஷ்னோயின் ட்விட்டர் பக்கத்தை மேலும் ஆராய்ந்தபோது, நவம்பர் 20, 2023 தேதியிட்ட அவரது மற்றொரு ட்விட்டர் பதிவு கிடைத்தது. அதில் அவர் முழு சம்பவத்திலும் RPF எடுத்த நடவடிக்கையைக் குறிப்பிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பதிவின் இணைப்பு இங்கே, கீழே ஒரு ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
மேலும், தொடர்புடைய ஊடக அறிக்கைகளைக் கண்டறிய கூகுளில் முக்கிய வார்த்தை தேடல் செய்தபோது, நவம்பர் 21, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு அறிக்கை கிடைத்தது. அதன் தலைப்பு, “ஆம் ஆத்மி தலைவரின் ட்வீட்டிற்குப் பிறகு ரயிலில் மது அருந்தியதற்காக 3 பேர் கைது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் ஒரு பகுதி, “ரயிலில் பயணித்த ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் ஒருவர் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்ததை அடுத்து, நாகௌர் மாவட்டத்தில் மது அருந்தியதாகவும், பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறி மூன்று ரயில் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே.
அதைத் தொடர்ந்து, வைரலான காணொளி சமீபத்தியது அல்ல, மாறாக 2023 ஆம் ஆண்டுக்கு முந்தையது என முடிவு செய்யப்பட்டது.
முடிவு:
ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் ஒரு பெண்மணியின் காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. சிலர் ரயிலில் மது அருந்திய பிறகு பிரச்னைகளை உருவாக்கியதாகக் கூறினர். இதுகுறித்த விசாரணையில், வைரலான காணொளி 2023 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டுள்ளதுது. ஆம் ஆத்மி தலைவர் இந்த சம்பவத்தைப் புகாரளித்த பின்னர் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.