டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுகிறதா? - #Annamalai சொன்ன தகவல்!
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று (ஜன.22) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்து பேசினர். அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். அப்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய அமைச்சரைச் சந்தித்தபின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறிதாவது,
"அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை (ஜன.23) மகிழ்ச்சியான தகவல் வரும். மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் நிறைவேற்றப்படாது என போராட்டக்குழுவினருக்கு அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.
தன்னை நம்பிய மக்களை பிரதமர் மோடி கைவிடவில்லை. தமிழ்நாட்டில் அரிட்டாபட்டி பகுதியில் மட்டுமே டங்ஸ்டன் உள்ளதாக தொல்லியல் துறை கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எங்குமே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். போராட்டக்குழுவினருக்கு பாஜக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றித் தருகிறோம்"
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.