”சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணமா..?- அமித்ஷா விளக்கம்!
நாட்டின் 17வது துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி ராதாகிருஷ்ணனும் , இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாக தான் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழகத்திலுருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேர்க்காணலில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,
பிரதமர் மோடிக்கும், எனக்கும் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு உள்ளது, நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதற்காகவா நாட்டு மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள்? ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து செயல்படுவது என்பதில் ஏதும் குறைபாடாக உள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, உள்ளிட்டோரும் ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தவர்களே” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாக தான் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழகத்திலுருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனத்தை அமைச்சர் அமித்ஷா நிராகரித்தார். மேலும் அவர்,
”கிழக்கு பகுதி மாநிலத்தில் இருந்து ஏற்கனவே நாட்டின் குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மேற்கு மற்றும் வடக்கு பகுதியை சேர்ந்தவர் மோடி தற்போது நாட்டின் பிரதமராக உள்ளார். எனவே, தெற்கிலிருந்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற இயல்பான எண்ணத்தின் அடிப்படையிலே சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் சி.பி ராதாகிருஷ்ணனை பொறுத்தவரை மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டுள்ளதோடு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும், ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். எனவே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாகவே சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு என்ற கண்ணோட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை பார்க்கக் கூடாது”
என்று தெரிவித்தார்.