#KolkataDoctorMurderCase | முடிவுக்கு வந்தது பயிற்சி மருத்துவர்களின் 42 நாட்கள் போராட்டம்!
42 நாட்களுக்கு பின் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கிடையே இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இச்சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், நீதிகிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்விலேயே முடிந்தது. இந்நிலையில் 42 நாட்களுக்கு பின் மருத்துவர்கள் இன்று பணிக்கு திரும்பினர். தற்போது பணிக்கு திரும்பிய முக்கிய காரணம் வெள்ளப் பாதிப்பு. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பை கருத்திற்கொண்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.
போராட்டத்திற்கும் நடுவிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி தங்கள் அர்ப்பணிப்பை தொடர்ந்தே வந்தனர். உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கோரியும், மாநில சுகாதாரத்துறை செயலரை பதவி நீக்கம் உள்ளிட்ட தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளோம். அவ்வாறு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம். நீதிக்கான எங்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.