அரசுப் பேருந்து குறிப்பேடு படிவம் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டதா? - மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம்!
அரசுப் பேருந்து குறிப்பேடு படிவம் ஆங்கிலத்தில் வழங்கப்படுவதாகவும். இதனால் போக்குவரத்து ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் அண்மையில் தமிழ் நாளிதழ் ஒன்றில் “தமிழைக் கைவிடும் தமிழ்நாடு அரசு ஆங்கிலத்திற்கு மாறிய அரசு பஸ் குறிப்பேடு” என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது. இது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இன்று(பிப்.27) தெரிவித்தது.
தொடர்ந்து தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகம் அதை உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மாநகர் போக்குவரத்துக் கழகம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியுதவியுடன் கூடிய சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (CITS) திட்டத்தின் கீழ் தற்போது பேருந்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, டிப்போ மேலாண்மை அமைப்பு (DMS) மூலம் பேருந்து குறிப்பேடு தாள்கள் தானாக உருவாக்கப்படுகின்றன.
மறுப்பு செய்தி
"மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டது" என்ற செய்தி தவறானது.
- மாநகர் போக்குவரத்துக் கழகம்.#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | @dinamalarweb pic.twitter.com/8193cB9kEM— MTC Chennai (@MtcChennai) February 27, 2025
ஆரம்ப மென்பொருள் மேம்பாட்டு கட்டத்தில், பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டன. இருப்பினும் செயல்படுத்தலின்போது, இந்த பேருந்து குறிப்பேடு தாள்கள் முழுமையாக தமிழில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பணிமனைகளிலும் பேருந்து குறிப்பேடு தமிழில் மட்டுமே உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்திற்கு மாற்றியுள்ளது என்ற செய்தி தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டதோடு நேற்று(பிப்.26) தமிழில் வழங்கப்பட்டுள்ள பேருந்து குறிப்பேடு படிவத்தையும் மாநகர் போக்குவரத்துக் கழகம் பகிர்ந்துள்ளது.