“இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? " - எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!
35 முதல் 55 வயதுடையவர்கள் குறிப்பாக இளைஞர்கள் திடீர் மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படு உயிரிழக்கிறார்கள். இதற்கு கொரோனா காலத்தில் எடுத்துக்கொண்ட மருந்துகள் காரணமா? இது பற்றி மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டதா? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பதில் அளித்துள்ளார். அதில்,
இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்களின் காரணம் தெரியாத திடீர் மரணங்கள் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், தேசிய தொற்று நோயியல் நிறுவனமும் இணைந்து 2023 மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஓர் ஆய்வை மேற்கொண்டன.
2012 அக்டோபர் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேறு எந்த நோய் பின்னணியும் இல்லாமல், மரணத்திற்கு 24 மணி நேரம் முன்பு வரை ஆரோக்கியமாக இருந்து திடீர் மரணமடைந்தவர்கள் பற்றி இந்த ஆய்வு நடந்தது. வயது, பாலினம், அருகில் இருந்த பிற நோயாளிகள், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட விபரங்கள், அவரது குடும்பத்தினர் முன்பு இப்படி திடீர் மரணத்திற்கு ஆளாகியிருக்கிறார்களா? புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததா? குடிப்பழக்கம் உள்ளவர்களா? மரணத்திற்கு இரண்டு நாள் முன்பிலிருந்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார்களா? என்பது போன்ற கேள்விகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மரணமடைந்த 729 பேர் மற்றும் ஒவ்வொருவருக்கும் அவர்களது வயது மற்றும் பாலினத்தை ஒட்டிய நான்கு பேர் என மேலும் 2916 பேர் ஆகியோரின் மருத்துவ மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசி ஒருமுறை எடுத்துக் கொண்டவர்களுக்கு திடீர் மரணத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதும்;. இரண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு திடீர் மரணத்திற்கான வாய்ப்பு மேலும் வாய்ப்பு குறைவு என்பதும் இந்த ஆய்வின் மூலம் முதலில் உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனாவுக்கு முந்தைய மருத்துவ சிகிச்சைகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், 48 மணி நேரத்திற்கு முன்பாக கடுமையாக உடற்பயிற்சி செய்தது, அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சிலர் இப்படி திடீர் மரணம் அடைந்தது ஆகிய பின்னணிகளே இந்த திடீர் மரணங்களுக்குக் காரணம் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. ஆக, கொரோனா தடுப்பூசிக்கும், இந்த திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்று ஆய்வு செய்ய நோயியல், நரம்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலன் ஆகிய துறை வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகளும் நடந்து வருகிறது. திடீர் மரணங்களைத் தடுக்கும் வகையில், தொற்று நோய் அல்லாத நோய்களை முன்னரே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், மேல் சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கவும் நாடு முழுக்க 770 மாவட்டங்களில் பிரத்யேக மருத்துவமனைகளும், 372 பகல் நேர சிகிச்சை மையங்களும், 233 இதய நோய் சிகிச்சை மையங்களும், 6410 சமுதாய சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான இடங்களில் பெரும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களை அமைக்கவும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இதய நோய் போன்ற விஷயங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வாழ்க்கை முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றி அமைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இந்த விஷய்ங்களில் மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, யோகா பயிற்சியில் மக்களை பங்கெடுக்கச் செய்யவும் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன” என மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.