எதிர்க்கட்சி தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி?
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) எண்ணப்பட்டன. இத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இருப்பினும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது. பல எம்.பி.க்கள் இது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர்.
இதேபோல் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டோரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.