”பிரதமர் மோடி அகிம்சையின் பக்கமா? வன்முறையின் பக்கமா?” - அமைச்சர் மனோ தங்கராஜ்..!
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”இன்று, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். 1966 ல் நவம்பர் 7 ஆம் தேதி டெல்லியில் நடந்த பசுவதை தடுப்பு வன்முறையில் காமராஜரை உயிரோடு வைத்து கொல்லப் பார்த்த இயக்கம் ஜனசங்கம், RSS.நாதுராம் விநாயக் கோட்சே என்ற RSS பணியாளரால் 1948 ஜனவரி 30 ல் காந்தியடிகள் சுட்டு கொல்லப்பட்டார்.
இன்று காந்தி பிறந்தநாளில் பிரதமர் மோடி மாலை வைத்து மரியாதை செய்கிறார். நேற்று, "நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராக கொண்டவன்தான். ஆர்எஸ்எஸ் என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம்; ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது" என்று ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு தபால் தலைகளை மோடி வெளியிட்டார். இதன் மூலம் RSS அமைப்பின் வன்முறைகளை மறைத்து அவற்றை நியாயப்படுதியள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கொல்ல முயன்ற, மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற RSS க்கு புகழாரம் சூட்டுவதும் மறுபுறம் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதும் மோடியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. பிரதமர் மோடி அகிம்சையின் பக்கமா? வன்முறையின் பக்கமா? என்பதை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.