"I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை" - டி. ராஜா பேட்டி!
'I.N.D.I.A.' கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் எந்த பிரச்னையும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் எம்எல்ஏ க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் கோ. பழனிச்சாமி, கே. உலகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாஜக ஆட்சியில் நல்லிணக்கமும், மதச்சார்பின்மையும் முழுமையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எ னவே, இந்த தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என டி.ராஜா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “சோடா பாட்டில் இல்ல... வாக்குகள் தான் பறக்கும்...” - அமரன் பட பாடலை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!
மேலும் அவர் கூறியதாவது :
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் பாஜகவால் இங்கு வெற்றி பெற முடியாது. அகில இந்திய அளவிலும் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.
எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பரப்பும் பிரதமர், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு குறித்து பேச தயங்குகிறார். கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறினார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை.
ஏழை, எளிய மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராகவும், அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகள் , கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி. எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை எழவில்லை. ஒட்டுமொத்த 'I.N.D.I.A.' கூட்டணியே பிரதமர் முகம்தான்"
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.