“தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா?” - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திறந்தவெளி கருத்தரங்கம் மற்றும் நிதி
அளிப்பு பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்
நேரு, நெசவாளர் அணி செயலாளர் முத்துக்குமார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சண்முகம்,
“இந்தி திணிப்பு, மொழி திணிப்பு என்பதெல்லாம் இப்பொழுதுதான் பேசுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள். கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது. மக்களுக்கு கல்வி போதிக்கும் உரிமை மாநில அரசிடம் உள்ள பொழுது, இதை ஏற்றதால்தான் நிதி, அதை ஏற்றால் தான் நிதி என கூறுவது என்ன நியாயம்?.
மத்திய அரசானது கல்விக்கான நிதியை தமிழக அரசுக்கு வழங்காமல் தமிழ்நாடு
மக்களை வஞ்சிக்கிறது. தற்பொழுது கூட அழிந்து வரும் சமஸ்கிருத மொழிக்குதான் அதிக நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். தமிழுக்கு குறைவாக
ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக துறைகளுக்கு எவ்வளவு நிதி
வழங்கியுள்ளார்கள் என நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?” என கேள்வி எழுப்பினார்.