பேடிஎம் வாலட்டை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி?
பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இந்தியாவின் முன்னணி பேமண்ட் நிறுவனமான பேடிஎம்-ஐ ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பணம் அனுப்புதல், பெறுதல், ரீசார்ஜ் செய்தல், கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியா முழுவதும் 30 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதாக கூறி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் பிரிவு 35A வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் கீழ் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்தும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாகவும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை நியமித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது.
இந்த பேடிஎம் செயலி மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை சார்ந்த சேவைகளை பேடிஎம் பேமென்ட் லிமிடெட் (PPBL) செய்து வருகிறது. சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) பேமெண்ட்ஸ் வங்கியில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி விதித்த தடையைத்தொடர்ந்து பேடிஎம் பங்குகள் இதுவரை 36% மேல் சரிந்துள்ளது. இன்று 10% மேல் சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இதனைத்தொடர்ந்து, பேடிஎம்-ன் தாய் நிறுவனமான One 97 Communications, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான என்பிஃப்சி (NBFC) மற்றும் எச்டிஃப்சி (HDFC) வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானதையடுத்து, ஜியோ பைனான்சியல் பங்குகள் 14% வரை உயர்ந்து ரூ.288.75 ஆக உயர்ந்தது.
எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஜியோ பைனான்சியல் ஆகியவை பேடிஎம்-ன் வாலட் வணிகத்தை கையகப்படுத்துவதில் முன்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மாவின் குழு கடந்த நவம்பரில் இருந்து ஜியோ பைனான்சியல் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், Paytm Payments Bank மீதான RBI தடைக்கு சற்று முன்னதாக HDFC வங்கியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.
ஜியோ பைனான்சியல் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக்கு சொந்தமானது. இது டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள் மற்றும் பில் பேமெண்ட்களைத் தொடங்க மறு-தளத்தை உருவாக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா பேசியதாவது, “நீங்கள் Paytm குடும்பத்தின் ஒரு அங்கம், நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. பல வங்கிகள் எங்களுக்கு உதவுகின்றன. சரியாக என்ன தவறு நடந்தது போன்ற விஷயங்களைப் பற்றி எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் விரைவில் கண்டுபிடிப்போம். என்ன செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியை அணுகுவோம்” இவ்வாறு தெரிவித்தார்.