For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5 ஆண்டுகளில் ரூ. 81 உயர்த்தியது திமுக அரசின் சாதனையா? அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 விழுக்காட்டை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10:56 AM Sep 28, 2025 IST | Web Editor
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 விழுக்காட்டை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 ஆண்டுகளில் ரூ  81 உயர்த்தியது திமுக அரசின் சாதனையா  அன்புமணி ராமதாஸ்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை என்பதால் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். செய்யாத ஒன்றை செய்ததாகக் கூறி தமிழக விவசாயிகளை ஏமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்வது கண்டிக்கத்தக்கது.

Advertisement

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், 2021-ஆம் ஆண்டில் வழங்கியிருக்க வேண்டிய ரூ.2500 விலையை நான்கரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் வழங்கியிருக்கிறார். உண்மையில் 2021-ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் விலையை விட திமுக வாக்குறுதி அளித்த கொள்முதல் விலை 32.42% அதிகம் ஆகும். அதே அளவீட்டைக் கொண்டு பார்த்தால் இப்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3311 வழங்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.811 குறைவாக கொடுத்து விட்டு நெல்லுக்கு அதிக விலை கொடுத்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசால் தற்போது குவிண்டால் ரூ.2500க்கு கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 மட்டும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. அதிலும் கூட முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 மட்டுமே திமுக அரசு உயர்த்தி வழங்கியிருக்கிறது. இது என்ன சாதனையா? ஒதிஷா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்குகின்றன. ஆனால், அதில் ஆறில் ஒரு பங்கைத் தான் திமுக அரசு வழங்குகிறது.

அதேநேரத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் 40 கிலோ மூட்டைக்கு ரூ.60 வீதம் கையூட்டு வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர். அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டும், ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல்லும் சேர்த்து ரூ.275 வீதம் கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. ரூ.131 ஐ கொடுத்து விட்டு, ரூ.275 ஐ பறித்துக் கொள்ளும் திமுக அரசுக்கு உழவர்கள் நலன் என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி இல்லை.

உழவர்களிடமிருந்து நெல்லையாவது முழுமையாக கொள்முதல் செய்கிறதா? என்றால் அதுவும் இல்லை. 2024 - 25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி 120 லட்சம் டன் என்ற அளவை தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதில் 40%ம் அதாவது 48 லட்சம் டன் மட்டும் தான் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 72 லட்சம் டன் நெல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கப்பட்டு இருக்கிறது . இது தான் உழவர்கள் நலனை பாதுகாக்கும் லட்சனமா?

2023&24ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 5.245 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 4.52% மட்டும் தான். அதேநேரத்தில் பஞ்சாபிலிருந்து 23.62%, தெலங்கானா 12.15%, சத்தீஸ்கர் 15.80%, ஒதிஷா 9.17% நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. பஞ்சாபில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஐந்தில் ஒரு பங்கும் மட்டும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 செலவாகிறது. அதனால், உழவர்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3500 வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 விழுக்காட்டை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் ஊழலை ஒழிக்க வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வ பணிகளை செய்வதை விடுத்து, குவிண்டாலுக்கு வெறும் 131 ஊக்கத்தொகை வழங்கிவிட்டு, ரூ.131 கோடி வழங்கியதைப் போல மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது". இவ்வருஞ் தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement