ஏடிஎம் மெஷினை தட்டினால் பணம் மட்டுமா? இனி சுட சுட பிரியாணியும் வரும்..!
இந்தியாவிலேயே முதன்முறையாக, அதுவும் சென்னையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் என்றாலே அது பணம் எடுக்க பயன்படும் இயந்திரம் மட்டும் தான் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இயல்பாகவே நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவற்றுதே ஏடிஎம் இயந்திரத்தின் வேலை ஆகும்.
இந்தியாவில் ஏடிஎம் மெஷினை பணம் எடுக்க மட்டும் தான் இதுவரை பயன்படுத்தியுள்ளோம். அதிகமாக பணம் எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், வெளிநாடுகளில் மட்டும் உணவு டெலிவரியிலும் ஏடிஎம் மெஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஹைதராபாத்தில் கூட தங்கத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
பணம் எடுக்க மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட ஏடிஎம், தற்போது பல பரிமாணங்களை அடைந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்றால், அதன் சேவையில் எந்த தடையும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருவதும் ஒரு காரணம். அந்த வகையில் பண பரிவர்த்தனையையும் தாண்டி, ஏடிஎம் மூலமாக பிரியாணி ஆர்டர்களையும் சிறப்பாக வழங்க முடியும் என்று, இந்தியாவிலேயே முதன் முறையாக, அதுவும் சென்னை கொளத்தூரில் இயங்கி வரும் பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி கடை வெளிநாடுகளில் இருப்பது போன்ற ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடையை திறந்து அசத்தியுள்ளது.
இந்த கடையில் நான்கு ஸ்மார்ட் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த திரை மூலமாக நமக்கு தேவையான விலையில், என்ன பிரியாணி வேண்டுமோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலை அந்த தொடு திரையில் தெரியும். அப்போது நீங்கள் கியூ-ஆர் கோர்ட்டில் ஸ்கேன் செய்தோ அல்லது கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலமோ பணம் செலுத்த வேண்டும். அடுத்த நிமிடம் உங்களுக்கு பிரியாணி வெளியே வரும். இந்த ஏடிஎம் மெஷின் மூலமாக, கொளத்தூர் பகுதி மக்கள் ஆர்வமுடன் பிரியாணியை வாங்கி செல்வதுடன், பிரியாணி வாங்கும் முறை மிகவும் எளிதாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி கடையின் தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து பேசிய போது, இந்தியாவிலேயே முதன்முறையாக தானியங்கி முறையில் ஆளில்லா பிரியாணி கடை திறந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வசதியை சென்னையில் தற்போது 12 இடங்களில் திறக்க திட்டமிட்டுள்ளோம். வருங்காலத்தில் இந்தியா முழுவதும் இயந்திரங்கள் மூலம் பிரியாணி கொடுக்க முயற்சி மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா