For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Misinformation-ஆல் பாதிக்கப்பட்ட முதல் அரசியல் தலைவர் இவரா?

03:33 PM Feb 15, 2024 IST | Web Editor
misinformation ஆல் பாதிக்கப்பட்ட முதல் அரசியல் தலைவர் இவரா
Advertisement

உலக அரசியலில் முதன் முதலாக Misinformation ஆல் பாதிக்கப்பட்ட அரசியல் தலைவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா..? அது பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

Advertisement

தேர்தல் என்றால் திருவிழா போன்றது தான். வாக்காளர் சரிபார்ப்பு,  வேட்பாளர் தேர்வு,  பூத் கமிட்டி,  வாக்குச்சாவடி,  பிரச்சாரம்,  பேரணி,  பொதுக் கூட்டம்,  இணைய வழி பிரச்சாரம் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் என்னவோ அதனை திருவிழா என்றே அழைக்கிறார்கள்.  என்னதான் தேர்தலில் போட்டி,  வெற்றி, ஆட்சி என அரசியல் நகர்ந்தாலும்.., பணப்பட்டுவாடா,  போலிச் செய்திகள்,  பொய் செய்திகள், சண்டை சச்சரவுகள் , அடிதடிகள் என இரண்டும் கலந்தே இருக்கின்றன.

 தற்போது செயற்கை நுண்ணறிவு உலகத்தில் வாழ்கிறோம்.  நூற்றாண்டு கால வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ள நாளிதழ்களும்,  வானொலியும், தொலைக்காட்சியும் கூட 2024ல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ள தொடங்கிவிட்டன.  ஆனால் தொழில்நுட்பம் உருவான போது அல்லது அறிமுகமானபோது அது சந்தித்த சவால்கள் ஏராளம்.  குறிப்பாக அரசியல் பிரச்சாரத்தில் இணையம் உருவான போதே misinformation சேர்ந்தே உருவாக தொடங்கிவிட்டது. அதுபற்றி விரிவாக காண்போம்.

கூகுளின் வருகையும் - தேடு பொறியும்

1998-ல் தான் கூகுள் நிறுவனம் தொடங்கப்படுகிறது.  முன்னதாக 1996ல் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களின் ஆய்வுக்கான Thesisதான் கூகுள். இது பின்னர் 1998ல் பொதுவெளியில் அனைவரும் பயன்படுத்தும்படி வெளியிடப்படுகிறது.

கூகுளின் தனிச் சிறப்பு என்னவெனில் அதனுடைய தேடுபொறி தான்.  அதற்கு முன்பு கொடிகட்டி பறந்து கொண்டிருந்த Yahoo நிறுவனம் கூகுளின் வருகையால் நிலைகுலைந்து காணாமல் போனது.  கூகுளின் அதிரடியான புதிய நுட்பங்கள்,  அதன் புதிய வசதிகளின் மூலம் உலக அளவில் அதிக பங்குதாரர்களை கூகுள் பெற்றது.  பயனாளர்களுக்கு கூகுள் எளிமையான ஒன்றாகவும் எளிதில் அணுகக் கூடிய ஒன்றாகவும் உள்ளது.

GOOGLE BOMB

கூகுளின் வருகைக்கு பின்னர் பலரும் அதன் தேடு பொறியைக் கண்டும்,  அதன் தரவுகளைக் கண்டும் ஆச்சர்யமடைந்தனர்.  1998ல் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் ஒரு ஆண்டிலேயே சில சச்சரவுகளையும் சந்தித்து.  1999ல் கூகுள் தேடுபொறியில் சென்று "சாத்தானை விட மோசமான ஒன்று (More evil than Satan)” என தேடினால் அதற்கான விடையாக பிரபல டெக் ஜாம்பவான் என அழைக்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதள பக்கம் தான் முதலாவது வந்து நிற்கும்.  இது அப்போதைய காலகட்டத்தில் பெரும் சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து இதற்கு கூகுள் பாம் (Google Bomb) எனப் பெயரிட்டனர்.  Google Bomb என்ற வார்த்தையை முதன்முதலில் வடிவமைத்தவர் அமெரிக்கவைச் சார்ந்த ஆடம் மேத்ஸ்தான்.  2001 ஏப்ரல் 6ம் தேதி அவர் Uber.net என்கிற இணையதள இதழுக்கு எழுதிய கட்டுரையில் இந்த வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தினார்.  அந்த கட்டுரையில் அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்தார்.  அதாவது "Talentless Hack " என்கிற வார்த்தையை அவர் கூகுளில் தேடும்போது அதற்கான பதிலாக அவரது நண்பரான ஆண்டி பிரஸ்மேனின் இணையதளத்தின் லிங்க் கிடைக்கும்படி அவர் Algorithm வடிவமைத்திருந்தார்.

கூகுள் பொதுவெளியில் இருப்பதால் அதன் Algorithm மற்றும் Keywordகளை மாற்றுவதின் வழியாகவோ,  அதிகமான தேடுபொறியில் கிடைத்த தரவுகள் , விமர்சனங்களின் வாயிலாகவோ அவை உங்களுக்கான தேடலின் விடையாக கிடைக்கும்.  உதாரணத்திற்கு ஜானி என்கிற பிரபலமாக அறியப்பட்ட ஒரு நபரை பலரும் "நாய்" என விமர்சனம் செய்திருந்தாலோ,  எழுதியிருந்தாலோ அதனை Keyword ஆக கூகுள் Algorithm எடுத்துக் கொள்ளும்.  இதனைத் தொடர்ந்து நீங்கள் நாய் என கூகுளில் தேடினால் நாய்களின் படங்களோடு சேர்த்து ஜானியின் படமும் இடம்பெறும்.

மார்டின் லூதர் கிங் பற்றிய misinformation

கருப்பின மக்களுக்கு போராடி தனது உயிரையும் கொடுத்தவர்தான் மார்டின் லூதர் கிங். அவரது நினைவு தினந்தன்று அமெரிக்காவில் விடுமுறை விடுவது அரசின் வழக்கம். அப்போது அமெரிக்காவின் பெல்லேர்ட் நடுநிலைப் பள்ளியில் மார்டின் லூதர் கிங் குறித்து கட்டுரை எழுத பல மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.  பலர் அவரைப் பற்றிய தகவல்களை ஆராய நூலகங்களுக்கு விரைந்தனர்.  பல புத்தகங்களை தரவுகளாக கொண்டு அவரைப் பற்றி எழுதத் தொடங்கினர்.

ஜேம்ஸ் என்கிற மாணவன் நூலகங்களின் குறிப்போடு சேர்த்து இணையத்தில் வெளியான கட்டுரைகளையும் தரவுகளாக எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.  அப்போதுதான் கூகுள் பொதுவெளியில் வந்திருந்த நேரம்.  இணையத்தில் மார்ட்டின் லூதர் கிங் பற்றி தேடியபோது நூலகங்களில் படித்ததை விடவும் பல புதுமையான தகவல்களை கண்டுகொண்டான்.  அவை அனைத்தும் 3 வருடங்களுக்குள் எழுதப்பட்டவை மட்டுமே. நூலகங்களை போல அரதப் பழமையான ஒன்று அல்ல.

அந்த இணையக் கட்டுரையில் கம்யூனிஸ்ட் கட்சியில் மார்ட்டின் லூதர் கிங்கின் ஈடுபாடு, கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு மூன்று வெள்ளைப் பெண்களுடன் கிங் பாலியல் தொடர்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த எஃப்.பி.ஐ விசாரணை ஆகியவற்றைப் பற்றி அந்த மாணவன் இதுவரை படிக்காத தகவல்களை கண்டறிந்தான். இதனைத் அனைத்தையும் இணைத்து அந்த கட்டுரைக்கு "மார்டின் லூதர் கிங் விடுமுறை விட தகுதியான நபரா? என்கிற தலைப்பில் கட்டுரை எழுதி மகிழ்ச்சியோடும் பாராட்டுக்களை பெறப் போகிறோம் என்கிற ஆர்வத்தோடும் அதனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்தான்.  ஆனால் அம்மாணவன் நினைத்த பாராட்டை விட எதிர்வினைகள் தான் கிடைத்து.

இதனைத் தொடர்ந்து ஆராய்ந்ததில் ஜேம்ஸ் கண்டுபிடித்த தளம்,  போலியான இணையதளமான StormFront என்ற வெள்ளை வெறுப்புக் குழுவால் ஸ்பான்சர் செய்யப்பட்டது என தெரியவந்தது.

Misinformationக்கு பலியான முதல் அரசியல்வாதி

1996 தேர்தலில் தான் முதன்முதலாக இணையதள போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டது என நாம் பார்த்தோம்.  அதன் பின்னர் நடைபெற்ற 2000ம் ஆண்டு தேர்தல்களில் MSNBC இணையதளத்தை தாண்டி கூகுள் களத்திற்கு வந்துவிட்டது.  2000 ஆண்டு பொதுத்  தேர்தலில் அமெரிக்காவே பரபரப்பாக  இயங்கிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் கூகுளில் சென்று பெண்களை குறித்து இழிவாக சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தையை தேடினால் (*******************) அதன் முதல் பதிலாக அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் டபில்யூ புஷ்ஷின் படமும் அவரின் இணையதளமும் வந்துவிடும்.  இது அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையானது.  இதுதான் உலக அரசியலில் நடைபெற்ற முதல் Misinformation ஆகும்.

இதேபோல 2004க்கு பிறகு கூகுள் தேடலில் "Miserable Failure" என தேடினால் அதற்கு முதல் பதிலாக ஜார்ஜ் புஷ்ஷின் படம் தான் வரும்.  அமெரிக்கா ஈராக்கில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நேரம் என்பதால் புஷ்ஷுக்கு எதிராக இணையதளங்களில் பலரும் எழுதி வந்த நிலையில் அதன் அல்காரிதம் மற்றும் Keyword அடிப்படையில் புஷ்ஷின் படம் வந்தது.  இதனைத் தொடர்ந்து கூகுள் பாம்பிங் என்கிற சொல்லாடல் பிரபலமானது.

-அகமது AQ

Tags :
Advertisement