“கூத்தாடி என்பது கேவலமான பெயரா? கெட்ட வார்த்தையா? " | #TVK மாநாட்டில் ஆவேசமாக பேசிய விஜய்!
'கூத்தாடி' என்பது கேவலமான வார்த்தையா? கூத்து இந்த மண்ணின் அடையாளம் என விமர்சனத்துக்கு தவெக தலைவர் விஜய் பதிலளித்தார்.
" 'கூத்து' மண்ணோடும் மக்களுடனும் கலந்த ஒன்று. கூத்தாடி என்ற பெயரால் எம்ஜிஆரும், என்டிஆரும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் கட்சி ஆரம்பித்தபோது, கூத்தாடி என்று அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்தார்கள். அவர்களையே அப்படி அழைத்தபோது, நம்மையும் எப்படி விமர்சிக்காமலா இருப்பார்கள். அந்த இரண்டு கூத்தாடிகள்தான், மாநில முதலமைச்சர்களாக மாறி மக்கள் மனதில் இன்றும் நீங்கா புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
'சினிமா' என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. தமிழர்களுடைய கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடுதான் சினிமா. பொழுதுபோக்கையும் தாண்டி, சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய ஆயுதம் 'சினிமா' . கூத்தாடி என்பது கேவலமான பெயரா? கெட்ட வார்த்தையா? ஒரு கூத்தாடியின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவன் நினைப்பதை சாதிக்கும் வரை நெருப்பு போல இருப்பான். குறியீடாக மாறிய கூத்தாடியைப் பார்த்தால் மக்கள் கூட்டம் கை தட்டும், கண் கலங்கும். இவர்களும் நம்மைப் போலவே இருக்கிறார்களே, நமக்கான ஒருவனாகவும் இருக்கிறாரே என மக்கள் நினைப்பதே இதற்கு காரணம்.
இதையும் படியுங்கள் : “அரசியலில் நாங்கள் குழந்தைதான்… ஆனால்…” – TVKMaanaadu-ல் விஜய் பேசியது என்ன?
மக்களுக்கு அந்த மனிதருடன் ஒருவித பிணைப்பு உண்டாகிறது. காலப்போக்கில் கூத்துதான் சினிமாவாக மாற்றமடைந்துள்ளது. ஆரம்பத்தில் நான் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்த காலகட்டத்தில், என் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் சிறிதும் கலங்கவில்லை. வாய்ப்புக்காக காத்திருந்து உழைப்பால் உயர்ந்துள்ள கூத்தாடிதான் நான். உழைப்பு மட்டுமே என்னுடையது. என்னை உயர்த்திப் பிடித்தவர்கள் மக்களாகிய நீங்கள். சாதாரண இளைஞனாக இருந்த விஜய் முதலில் ஒரு நடிகனாக மாறினான், தொடர்ந்து வெற்றிபெற்ற நடிகனாக மாறினான், பின்னர் பொறுப்புள்ள மனிதனாகவும் மாறினான். பொறுப்புள்ள மனிதன் பொறுப்புள்ள தொண்டனாக மாறினான், பொறுப்புள்ள தொண்டனாக இன்று இருப்பவன் நாளை… அதை நான் சொல்லத் தேவையில்லை "இவ்வாறு தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பேசியுள்ளார்.