திரைத்துறையில் களமிறங்கும் தனுஷ் மகன்? - வெளியான புதிய தகவல்!
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் தனுஷ் எந்த படத்தில் நடிக்கிறார், அதில் யார் இயக்குநர் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதற்கிடையே தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குவதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
‘தனுஷ் 50’ திரைப்படத்தின் பெயர் ‘ராயன்’ என அண்மையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது தொடர்பான போஸ்டர்களும் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது.
வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தீப் கிஷான் ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ‘ராயன்’ திரைப்படத்தில் பிரபல இயக்குநரும், தனுஷின் சகோதரருமான செல்வராகவனும் இணைந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தனுஷின் மகன் யாத்ரா இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.