தவெகவின் ஆலோசகராகும் ஆதவ் அர்ஜுனா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது, விசிக கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்ததிலிருந்தே, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதனிடையே, ஆதவ் அர்ஜுனாவின் voice off commons என்ற நிறுவனத்துடன் தமிழக வெற்றிக் கழகம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா தவெக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால், ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் ஆலோசராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் தவெக தலைவர் விஜய் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனா கொடுக்கும் தகவல் அடிப்படையில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசுவதற்காகத்தான் இன்று பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விஜய்யை நேரில் சந்தித்து ஆதவ் அர்ஜுனா பேசியதாக கூறப்படுகிறது.