தருமபுரியில் இருந்து வெற்றிக்கணக்கை தொடங்குகிறாரா விஜய்? தவெக முக்கிய நிர்வாகி தகவல்!
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவார் என அக்கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப. சிவா தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாவட்ட தலைவர் தா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தருமபுரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், தாங்கள் இருந்த கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மாவட்ட தலைவர் தா.ப. சிவா தவெக துண்டு அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளிடையே பேசிய அவர்,
"2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தருமபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாக கூறுகிறேன். தருமபுரி மண் அதியமான் பிறந்த மண், அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று முதலமைச்சர் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோரிக்கையையடுத்து தருமபுரியில் தான் போட்டியிடுவதாக தலைவர் உறுதி அளித்துள்ளார். ஆகிறது. இச்செய்தியை இக்கூட்டத்தின் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நமது தலைவரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என உறுப்பினர்களிடம் தருமபுரி மாவட்டத் தலைவர் சிவா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தவெக மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகாந்த், வழக்கறிஞர் அணி
மாவட்ட தலைவர் பச்சையப்பன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய நிர்வாகி செல்வம்,
பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் சுரேந்தர் மற்றும் தவெக கட்சி
தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.